ராம நவமி கொண்டாட்டத்தின் போது கலவரம் வெடித்ததால் வட மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
குஜராத் மாநிலம் வதோதராவில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. உத்தர பிரதேச மாநிலம் மதுரா மற்றும் லக்னோ நகரங்களிலும் ராம நவமி விழாவின்போது கலவரம் வெடித்தது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சம்பாஜி நகரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது ஏராளமானோர் சாலையில் நின்று கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் உள்ள ஷீபூர் பகுதியில் ராம நவமி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்தது. மேலும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இதே போன்று கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இது குறித்து பேசுகையில், "மேற்கு வங்கம், குஜராத், சசாராம், பீகார் மற்றும் சில இடங்களில் ராம நவமி அன்று கலவரம் வெடித்தது. இது நல்ல விஷயமா. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாட்டில் எப்படி வளர்ச்சி ஏற்படும்" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.