நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இறந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ கூறியுள்ளது.
இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமருக்கு இந்த விபத்து தொடர்பாக விளக்கமளித்துள்ளதோடு, பிபின் ராவத்தின் வீட்டிற்கு சென்று அவரது மகளை சந்தித்துள்ளார். இந்தசூழலில் மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஹெலிகாப்டர் விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகம் தகவல் அளிக்கும் என கூறியுள்ளார்.
அதே நேரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், இந்திய இராணுவ தளபதி நரவனே, ஹெலிகாப்டர் விபத்து குறித்து விளக்கமளித்துள்ளார். மேலும் நரவனே பிபின் ராவத் மகளை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மும்பையில் குடியரசு தலைவர் கலந்துகொள்ள இருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.