சாலையோர கடைகளை துவம்சம் செய்த காட்டுயானையின் வீடியோ, தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தென்னிந்தியாவின் காஷ்மீர் என்றழைக்கப்படும் மூணாறு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. சுற்றுலாத் தலமான மூணாறுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளுக்காக அப்பகுதியில் உள்ள சாலைகளில் பழக்கடைகள், இளநீர் விற்பனை கடைகள் பரவலாகவே காணப்படும்.
அதே சமயம், காட்டுயானை ஒன்று அடிக்கடி ஊருக்குள் வந்து அட்டகாசம் பண்ணிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. பார்ப்பதற்கு அம்சமாகத் திகழும் அந்த காட்டுயானையை அப்பகுதி மக்கள் 'படையப்பா' என்று பாசத்தோடு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில், மூணாறின் எக்கோ பாயிண்ட் பகுதிக்கு வந்த படையப்பா யானை, சாலையோரக் கடைகளைத் துவம்சம் செய்தது. பின்னர், அந்தக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அன்னாசி பழம், கேரட், சோளம் உள்ளிட்ட உணவுப்பொருட்களைத் தின்று தீர்த்தது. அன்றிரவு முழுவதும் அங்கேயே டேரா போட்ட படையப்பா, அடுத்த நாள் காலை 7 மணிக்கு தான் காட்டுக்குள் சென்றது. இந்தக் காட்சிகளை சுற்றுலா வந்த பயணிகள் ரசித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் காட்டுயானையின் ஆக்ரோஷத்தைப் பார்த்து உடல் நடுங்கினர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே பகுதிக்கு செகண்ட் ரவுண்டு வந்த படையப்பாவுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இளநீர் காய்களை பார்த்தவுடன் புருவம் தூக்கியது. அந்த இளநீர் காய்களை தரையில் போட்டு மிதித்து பின்னர் அதை உடைத்து சாப்பிட்டது. இந்தக் காட்சியை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் படையப்பா யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்ப இரண்டு மணி நேரமாகப் போராடினர். மூணாறு சாலையோரக் கடைகளைத் துவம்சம் செய்யும் படையப்பா யானையின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.