Skip to main content

முதல்வர் திறக்கும் முன் பீகாரில் உடைந்த புதிதாக கட்டப்பட்ட அணை!

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
முதல்வர் திறக்கும் முன் பீகாரில் உடைந்த புதிதாக கட்டப்பட்ட அணை!

பீகார் மாநிலம் பகல்பூரில் முதல்வர் நிதிஷ்குமாரால் திறந்துவைக்கப்பட இருந்த தடுப்பணை திடீரென உடைந்து, வெள்ளநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் 1977ஆம் ஆண்டு பதேஸ்வரத்தான் கங்கை நதிநீர்த்தடுப்பணைப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது இதற்காக ஆகும் செலவு ரூ.13.88 கோடியாக அறிவிக்கப்பட்டிருந்தது. 2008ஆம் ஆண்டு நிர்வாக ஒப்புதல் குழுவால் இந்தத் திட்டத்திற்கு ரூ.389.31 கோடி ஒதுக்கப்பட்டு நடந்துவந்த அணையின் கட்டுமானப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இந்த அணையில் தேங்கும் நீரின் மூலம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் விவசாய நிலங்கள் செழிப்படையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அணைப்பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், நாளை இந்த அணையைத் திறந்துவைக்க முதல்வர் வருவார் என அறிவிக்கப்படிருந்தது. அதற்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட சோதனையில் அணையில் உள்ள நீரின் இருப்பு தாங்காமல் திடீரென உடைந்தது. இந்த நீர் ககல்கோன் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.

இதனால், முதல்வர் நிதிஷ்குமார் கலந்துகொள்ள இருந்த அணைதிறப்பு நிகழ்ச்சி ரத்துசெய்யப்படதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, பீகார் மாநில நீர்வளத்துறை அமைச்சர் லல்லன் சிங், முழுவேகத்தில் வெள்ளம் வந்ததுதான் அணை உடைந்ததற்குக் காரணம். புதிதாக கட்டப்பட்ட பகுதிகளுக்கு எந்தவித பாதிப்புமில்லை. அணையின் பழைய பகுதியில் ஏற்பட்ட விரிசலால் தான் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அணையில் இருந்து வெளியேறும் நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்த மணல்மூட்டைகள் குவிக்கப்பட்டுள்ளன.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்