இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மூன்றாவது கரோனா அலை ஏற்படலாம் என தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று மூன்றாவது அலையை கையாளுவது தொடர்பாக உலகளாவிய ஆலோசனை கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தினார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜியும் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய அவர், "மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், நாட்டிற்கான தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் மத்திய அரசிடம் இல்லை. மொத்த நாட்டிற்கும் உறுதியளிக்கப்பட்ட அளவிலான தடுப்பூசிகளை நாம் பெறவில்லை" என கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா, "குஜராத், உ.பி., கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் போதுமான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளன. மக்கள் தொகை அடர்த்தியை ஒப்பிடுகையில் மேற்குவங்கம் குறைவான தடுப்பூசிகளை பெற்றுள்ளது. மாநிலங்களிடையே பாகுபாட்டை காட்ட வேண்டாம் என மத்திய அரசிடமும், பிரதமரிடமும் முறையிடவுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.