இந்தியாவில் இதுவரை 3.10 கோடி பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (16.07.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 3,10,26,829 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 38,949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரேநாளில் 40,026 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,83,876 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.28 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 542 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,12,531 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவிற்கு 4,30,422 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
உலக அளவில் கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் கரோனா பாதிப்பு பதிவாகியதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, முந்திய வாரங்களைவிட கடந்த வாரம் 10 விழுக்காடு அதிகமாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது. தொற்று பாதிப்பு மட்டுமல்லாது கரோனா உயிரிழப்புகளும் மூன்று விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில்தான் கரோனா அதிகம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா வகை கரோனா 111 நாடுகளில் பரவியதுதான் இதற்கு முக்கியக் காரணம் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது உலக அளவில் கரோனா மூன்றாம் அலையின் தொடக்கத்தில் உள்ளோம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.