மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பட்டியலின மக்கள் மீது பல்வேறு தாக்குதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பட்டியலின இளைஞரை கொடூரமாகத் தாக்கி அவரது வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டியலின மக்கள் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் மீண்டும் பட்டியலின சமுகத்தைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், உதய்பூர் கிராமத்தைச் சேர்ந்த நேதுரம் அஹிர்வார் என்ற முதியவர் அங்குள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று திரும்பி வந்துள்ளார். அப்போது முதியவரின் எதிரே, மாற்று சமூகத்தைச் சேர்ந்த ராம்ஜி பாண்டே மற்றும் அவதேஷ் துபே ஆகிய இருவரும் வந்துள்ளனர். அபோது ராம்ஜி பாண்டே மற்றும் அவதேஷ் துபே ஆகிய இருவரையும் முதியவர் கை கூப்பி வணங்கவில்லை என்று அவரைத் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், முதியவரை இருவரும் 3 மணி நேரம் கட்டி வைத்து தாக்கியதோடு, சாதிப் பெயரைக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
மூன்று மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்ட முதியவருக்கு அவர்கள் தாக்கியதில் கால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முதியவரின் உறவினர்கள் காவல்துறையினரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாகவுள்ள குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.