Skip to main content

பெங்களூர் கட்டிட விபத்து; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

Published on 24/10/2024 | Edited on 24/10/2024
 Bangalore building accident; Prime Minister Modi relief announcement

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே பெங்களூர் பாபுசபாளையத்தில் 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இதில் பல்வேறு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய சூழலில் தான் கனமழை காரணமாக நேற்று (22.10.2024) மாலை திடீரென இந்த கட்டடம் இடிந்து விழுந்தது. சுமார் 24  மணி நேரத்திற்கும் மேலாக அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டட விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 21 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே சமயம் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் தொடர்ந்து மீட்புப் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினரின் குழுக்களும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 மாடிக் கட்டடம் சரிந்து விழும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 8 பேரில் 2 பேர் தமிழர்கள் எனத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகியோர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் உடல்களும் சிவாஜி நகர் மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரின் உடல்களும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரும் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி. நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்