ஹரியானா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள இஷாபூர்கெரி கிராமத்தின் ஊராட்சித்தலைவராக பிரேம்சிங் இருந்துவருகிறார்.
இவர் சமீபத்தில், இந்த கிராமத்தில் உள்ள இளம்பெண்கள் இன்டர்நெட் வசதியுள்ள செல்போன்களைப் பயன்படுத்தவும், ஜீன்ஸ் பேண்ட் அணியவும் உத்தரவிட்டார். பிரேம்சிங்கின் இந்த உத்தரவு அக்கம்பக்கத்து கிராமங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சொந்த கிராமத்தில் இளம்பெண்கள் மத்தியில் இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், இந்தத்தடை உத்தரவு சில தினங்களுக்கு முன்னர் நடைமுறைக்கு வந்தது.
இந்த உத்தரவைப் பிறப்பித்த பிரேம்சிங் இதுகுறித்து, ‘இன்டர்நெட் வசதியுள்ள செல்போன்களைப் பயன்படுத்தும் இளம்பெண்கள், ஆண்களிடம் காதல் வயப்பட்டு அவர்களை காதல் திருமணம் செய்துகொள்கின்றனர். நாகரீகமான உடை அணியும் பெண்களால் ஆண்கள் கவரப்படுகின்றனர். இதனால், தேவையற்ற பிரச்சனைகள் உருவாகின்றன. மேலும், காதலித்து வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் இன்றுவரை வீடுதிரும்பவில்லை’ என விளக்கமளித்துள்ளார். மேலும், இன்டர்நெட் வசதியில்லாத செல்போன்களை இளம்பெண்கள் பயன்படுத்துவதில் எந்தவித பிரச்சனை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.