வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், பயணக் கட்டணம் குறைவாகவும் கொடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில் ஊஃபர், ரேபிடோ போன்ற சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியது.
இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த அனுமதியால் தங்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்தினர். ஆனால், அன்றைய அரசு தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகப் பல புகார்கள் எழுந்தன. அந்த வகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூர் பகுதியில் பைக் டாக்சியில் சென்ற பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்த நிலையில், இந்த மின்சார பைக் டாக்சி திட்டத்துக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மின்சார பைக் டாக்சி திட்டம், மோட்டார் வாகன சட்டத்தை மீறுகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படுகிறது. மேலும், இந்த இருசக்கர மின்சார வாகனங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. வாகன நம்பர் பிளேட் இல்லாத மின்சார வாகனங்களால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், கர்நாடகாவில் இந்த மின்சார பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.