காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித், அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று (10.11.2021) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பாபர் மசூதியை யாரும் இடிக்கவில்லை என கூறுவதற்கு நாம் யாரும் வெட்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
'சன்ரைஸ் ஓவர் அயோத்தியா - நேஷன்ஹூட் இன் அவர் டைம்ஸ்' என்ற சல்மான் குர்ஷித்தின் புத்தக வெளியீட்டு விழாவில் ப. சிதம்பரம் பேசியதாவது, “அந்தக் கதை (அயோத்தி பிரச்சனை) 1992இல் தொடங்கி சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் எதிர்பாராத முடிவுக்கு வந்தது.
இந்த தீர்ப்பிற்கான நீதித்துறை முகாந்திரங்கள் மிகவும் குறுகியது. ஆனால் நீண்டகாலம் கடந்ததால் அனைத்து தரப்பும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டன. இரு தரப்பும் அதை ஏற்றுக்கொண்டதால், அது சரியான தீர்ப்பாக மாறிவிட்டது. இது இருதரப்பும் ஏற்றுக்கொண்ட சரியான தீர்ப்பல்ல. உண்மை என்னவென்றால், டிசம்பர் 6, 1992 அன்று நடந்தது மோசமான தவறு. அது நமது அரசியலமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்திய சம்பவம். அது உச்ச நீதிமன்றத்தையும் மீறி, இரு சமூகங்களுக்கு இடையே இணைக்க முடியாதது போல தோன்றும் இடைவெளியை உருவாக்கியது. அது தவறு; மோசமான தவறு. அது எப்போதுமே மோசமான தவறுதான் என 1000 முறை சொல்லுவேன். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், பாபர் மசூதியை யாரும் இடிக்கவில்லை என்று சொல்ல நாம் வெட்கப்படவில்லை. அந்த முடிவு நம்மை எப்போதும் ஆட்டிப்படைக்கும்.” இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த விழாவில் பேசிய திக்விஜய் சிங், "அத்வானியின் ரத யாத்திரை சமூகத்தை ஒற்றுமைப்படுத்தவில்லை, பிளவுபடுத்தியது. அவர் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் வெறுப்பின் விதையை தூவி, நாட்டில் மதவெறிக்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினார். வீர் சாவர்க்கர், பசு மாதா என அழைக்கப்படுவதைக் கேள்வியெழுப்பினார். மாட்டுக்கறி சாப்பிட்டார். இந்து என்ற அடையாளத்தை நிலை நிலைநாட்ட இந்துத்துவா என்ற வார்த்தையைக் கொண்டுவந்தார். அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது" என கூறியுள்ளார்.
மேலும் அவர், 1858ஆம் ஆண்டு முதல் ராம ஜென்மபூமி சர்ச்சை இருந்துவந்தது. விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை அதை ஒரு பிரச்சனையாக மாற்றவில்லை. ஆனால், 1984ஆம் ஆண்டில் இரண்டு சீட்டுகளுக்கு சுருக்கப்பட்ட பின்னர் அவர்கள் இதனை தேசிய பிரச்சனையாக்க முடிவு செய்தனர். ஏனென்றால் அடல் பிஹாரி வாஜ்பாயின் காந்திய சோசலிசம் தோல்வியடைந்தது. அதனையடுத்து அவர்கள் தீவிர மத அடிப்படைவாதத்தை எடுத்துக்கொண்டனர்" எனவும் கூறியுள்ளார்.