ராமர் கோவிலைப் போலவே அயோத்தி ரயில்நிலையத்தை மீண்டும் கட்டுவதற்கான திட்டத்தை, மத்திய அமைச்சகத்தில் ரயில்வே அமைச்சகம் முன்மொழிய இருப்பதாக மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்கா உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டினார். இதில் அயோத்தி ரயில்நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான செலவு ரூ.80 கோடி. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நாடு முழுவதிலும் உள்ள ராமர் பக்தர்கள் அயோத்திக்கு வருவதற்கு வசதியாக அதை இணைக்கவேண்டும் என்பதே நம் அரசின் எண்ணமாக இருக்கிறது. அயோத்தி ரயில்நிலையத்தின் மேம்பாடு குறித்த பேச்சுவார்த்தை வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலேயே இருந்ததுதான். அயோத்தி ரயில்நிலைய வேலைகள் முடிந்ததும், அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான வேலைகளும் தொடங்கும்’ என தெரிவித்தார்.
அயோத்தியில் மறுசீரமைக்கப்பட இருக்கும் ரயில்நிலையத்தில், ராமர் கோவிலைப் போன்ற கலைத்துவ வேலைப்பாடுகள் செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.