அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.
மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.