புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்று, மே மாதம் 03-ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் என்.ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகள், பா.ஜ.க 6 தொகுதிகள் என தேசிய ஜனநாயக கூட்டணி 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளும், தி.மு.க 6 தொகுதிகள் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 8 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
அதையடுத்து ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 07-ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி திரும்பி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். ரங்கசாமிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.
இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முதலில் புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக என்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன் பதவி ஏற்றார். துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன்பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் என்.ரங்கசாமி சட்டமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார். அவருக்கு தற்காலிக சட்டப்பேரவை தலைவர் க.லட்சுமி நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளை சார்ந்த எம்.எல்.ஏக்கள், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமணம் எடுத்துக் கொண்டனர். இதனிடைய புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன் ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டனர். அனைவருக்கும் தற்காலிக பேரவைத் தலைவர் லக்ஷ்மிநாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.