இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரான பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் தற்போது அந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முன்னதாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 7 வீராங்கனைகள் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் கொடுத்தார்கள். புகாரின் விவரங்கள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், மல்யுத்த வீரர்களின் உடல் அங்கங்களை அவர்களது அனுமதியின்று தொட்டதாகவும், பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லைகளை கொடுத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2022 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய மல்யுத்த போட்டிகளின் நினைவாக நடைபெற்ற புகைப்பட நிகழ்வில் வீராங்கனை ஒருவருக்கு பிரிஜ் பூஷண் சிங் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதை புகைப்பட நிகழ்வின் போது உடன் இருந்த சர்வதேச நடுவரான ஜக்பீர் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். பிரிஜ் பூஷண் சிங் மீதான வழக்குகளில் பட்டியலிட்டுள்ள 125 சாட்சிகளில் ஜக்பீர் சிங்கும் ஒருவர்.
இதனிடையே ஆசியக் கோப்பை போட்டிகளில் மல்யுத்த வீரர்கள் பங்கேற்பதற்கான தேர்வு வரும் ஜுன் 12 முதல் 15 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இந்த தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து ஆசியக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். வீரர்களின் விவரங்களை சமர்ப்பித்த பின் போட்டி நடைபெற இடையில் ஒரு மாதமே உள்ளது. இந்நிலையில் இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனைவரும் கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில் போட்டியில் கலந்து கொள்வதற்கான தேர்வில் அவர்கள் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வி எழுகிறது.
இதனிடையே, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுத்தால் தான் ஆசியப் போட்டியில் பங்கேற்போம். உளவியல் ரீதியாக வீராங்கனைகள் எத்தகைய பாதிப்பை சந்தித்துள்ளனர் என்பதை உணராமல் இருக்கின்றனர் என சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் நடந்த ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை வென்ற போட்டியாக மல்யுத்தம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.