டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாக அறிவித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீட்டிப்பு ஜாமீன் மனுவை நிராகரித்தது.
இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (01-06-24) நடைபெற்றது. அப்போது இதையடுத்து, இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிமன்றம், கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை வரும் ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் கொடுத்த இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், தற்போது டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி, மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகளுடன் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து திகார் சிறைக்கு புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. என் மீதான குற்றங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. பிரச்சாரம் செய்ய ஏதுவாக ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்துக்கு நன்றி” என்று கூறினார்.