நிர்பயா வழக்கில் நீதி வழங்க இவ்வளவு காலம் ஆனதற்கு நமது சிஸ்டம் சரியில்லாததே காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி தனது ஆண் நண்பருடன், பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்கொடுமையைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. அப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்ததால், இரு அவைகளிலும் நிர்பயா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகளான ஆறு பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். ஆறு குற்றவாளிகளில் ஒரு நபர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட நிலையில், மற்றொரு குற்றவாளி சிறார் சட்டத்தின்படி சிறையிலடைக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மீதமிருந்த நான்கு குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர்கள் தாக்கல் செய்த மனுக்களால் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் தேதி மூன்று முறை மாற்றிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், " இந்த வழக்கில் நீதி வழங்க 7 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் இனி எப்போதும் நடக்காது என்று நாம் இந்நாளில் உறுதிமொழி எடுக்க வேண்டும். குற்றவாளிகள் கடைசிக்கட்டம் வரை சட்டத்தை எவ்வாறு கையாண்டார்கள் என்பதை நாம் பார்த்தோம். நமது அமைப்பில் நிறைய ஓட்டைகள் உள்ளன, நாம் நம்முடைய கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.