
டெல்லி ஆளுநர் மாளிகையில் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைவிட்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் பேசுமாறு ஆளுநர் அறிவுறுத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 9வது நாளாக இன்று தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தலைமை செயலாளர் அபிராஷ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஐஏஎஸ் அதிகாரிகள் நான்கு மாதங்களாக அமைச்சர்களின் கூட்டங்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆளுநரும் மத்திய அரசும் ஐஏஎஸ் அதிகாரிகளை தூண்டி விடுவதாகவும், ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் டெல்லி அரசுக்கு ஒத்துழைப்பதில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இதனால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் 9வது நாளாக உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று தலைமைச்செயலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கவர்னர் அறிவுறுத்தியதால் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார் கெஜ்ரிவால்.