டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதே சமயம் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா பலமுறை மனு செய்தும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ரூ. 338 கோடி பணம் கைமாறியதற்கான பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகவும், வழக்கின் விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை வெளியே விட்டால் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அழித்துவிடுவார் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கை 6 முதல் 8 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டதோடு, விசாரணை தாமதமானால் மூன்று மாதங்களுக்குப் பிறகு மணீஷ் சிசோடியா மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய போதும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (04-01-24) கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கெஜ்ரிவால் இல்லத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி அலுவலகத்தில் அதிகளவில் தொண்டர்கள் குவிய இருப்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமலாக்கத்துறையின் சம்மன்கள் பொய்யானவை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஊழல் இல்லை என்பது தான் உண்மை. டெல்லி மதுபான முறைகேடு புகார் தொடர்பாக தனக்கு எதிராக அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன் சட்டப்பூர்வமானதாக இருந்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். பா.ஜ.க என்னை கைது செய்ய நினைக்கிறது. என்னுடைய மிகப்பெரிய சொத்து என்னுடைய நேர்மை தான். அதை அவர்கள் அழிக்க விரும்புகிறார்கள்.
எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் அனைத்தும் சட்டவிரோதமானது என்று எனது வழக்கறிஞர்கள் என்னிடம் கூறியுள்ளனர். பா.ஜ.க.வின் நோக்கம் என்னிடம் விசாரணை நடத்துவது அல்ல. மக்களவைத் தேர்தலுக்கு என்னை பிரச்சாரம் செய்யவிடக்கூடாது என்பது தான். மக்களவைத் தேர்தல் வரவுள்ள நேரம் பார்த்து அமலாக்கத்துறை எனக்கு சம்மன் அனுப்புவது ஏன்?. நேர்மையான அரசியல்வாதிகளை மத்திய பா.ஜ.க அரசு சிறையில் தள்ளுகிறது. பா.ஜ.க.வினர் ஊழலில் ஈடுபட்டால் மத்திய விசாரணை அமைப்புகள் அவற்றை கண்டுகொள்வதில்லை. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் என்னை மிரட்டி கைது செய்ய பா.ஜ.க விரும்புகிறது. விசாரணை என்ற பெயரில் என்னை அழைத்து கைது செய்ய விரும்புகிறார்கள். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பா.ஜ.கவில் சேராதவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை” என்று கூறினார்.