ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3000 உதவித்தொகை உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
அதேபோல், மத்தியப் பிரதேச மாநிலத் தேர்தலுக்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரவிந்த கெஜ்ரிவால், பல வாக்குறுதிகளை அளித்தார். அதில் அவர், “மத்தியப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் மாநிலம் முழுவதும் இலவச கல்வியை வழங்க தரமான பள்ளிகளை உருவாக்குவோம். மருத்துவமனைகளில் ரூ. 20 லட்சம் செலவில் பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகளுடன் இலவச சிகிச்சையும் அளிக்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3000 உதவித்தொகை வழங்கப்படும். 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
24 மணி நேரமும் தடையில்லாத மின் விநியோகம் மற்றும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள மின் கட்டணங்கள் ரத்து செய்யப்படும்” என்று கூறினார். டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் என அடுத்தடுத்து தங்களது ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காகப் பல வாக்குறுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கி வருகிறார். இதனிடையே, இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றுவது தொடர்பாகப் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றுவது தொடர்பாகப் பேசினார். அதில் அவர், “இந்தியா என்பது உங்கள் தந்தைக்கு சொந்தமானதா? இந்த நாடு 140 கோடி மக்களுக்கும் சொந்தமானது. கடந்த ஆண்டு வரை இந்தியா என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்கள். தைரியம் இருந்தால் இந்தியாவின் பெயரை மாற்றுங்கள்? நான் பா.ஜ.க.வுக்கு நேரடியாக சவால் விடுகிறேன்” என்று கூறினார்.