மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்காக பா.ஜ.க தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதே போல், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்கு, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில், பா.ஜ.க சார்பில் பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடி களமிறங்குகிறார். ஆனால், பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி சார்பில், இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் எதிர்கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்கப்பட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்கள்” என்று கூறினார்.