நாட்டின் 74வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் படாக் எல் சிசி பங்கேற்றார்.
குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் மற்றும் மத்திய அரசுத் துறைகளின் 6 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்தியில் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் இடம் பெற்று இருந்தது. மேலும் அலங்கார ஊர்தியே கல்வி, கலை, போர் போன்றவற்றில் பெண்கள் வலிமையுடன் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. அலங்கார ஊர்தியில் ஔவையார், பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரதநாட்டியக் கலைஞர் பால சரஸ்வதி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி, விவசாயம் மேற்கொள்ளும் 107 வயது மூதாட்டி பாப்பம்மாள் ஆகியோரது சிலைகள் இடம் பெற்று இருந்தன.
இந்நிலையில், டெல்லியில் நடந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில் சிறந்த ஊர்திக்கு மக்கள் வாக்களிக்கும் முறை மத்திய அரசின் MyGov.in என்ற இணையதளத்தில் உள்ளது. இதில் தமிழ்நாடு (tamilnadu) என்பதற்கு பதிலாக ‘தமிழ் நாயுடு’ (tamilnaidu) என இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.