தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர் தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்று கூறினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், என பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் ஹர்பன்ஸ்பூ கிராமத்தில் ‘மேரி மாதி, மேரா தேஷ்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அனுராக் தாக்கூர், “உதயநிதியின் இந்த சனாதனம் குறித்த கருத்துக்கு அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கு வங்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது கல் வீசினார்கள், துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பீகார், உத்தரப் பிரதேசத்தில், சீதா தேவி மற்றும் ராமாயணத்திற்கு எதிராகப் பேசினார்கள். தற்போது சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுகின்றனர். அவர்கள் இந்து விரோதிகள், சனாதன விரோதிகள் மற்றும் ஓ.பி.சி. விரோதிகள்.
இந்துக்களை ஒழிக்க நினைத்தவர்கள் தான் ஒழிந்துவிட்டார்கள். உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்தை, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எதிர்க்கவில்லை. வெறும் ஓட்டு வங்கி அரசியலுக்காக சமூகத்தை பிரித்து கீழ்த்தரமாக செயல்படக் கூடாது. ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் நாட்டிடமும், இந்து சமூக மக்களிடமும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.
அதேபோல், டெல்லியில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்து மதத்தை அவமதிப்பதையும், நாட்டில் பிளவை ஏற்படுத்துவதையும் காங்கிரஸ் கூட்டணி தங்களது கொள்கையாக வைத்திருக்கிறது” என்று கூறினார்.