இந்தியா சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த 23ம் தேதி மாலை 6.2 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து ஆறு மணி நேரம் கழித்து லேண்டரில் இருந்த ரோவர் வெளியேவந்து நிலவில் எட்டு மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக நேற்று முன் தினம் இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சந்திரயான் மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்து அதன் முதல் தகவலை பூமிக்கு அனுப்பியுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தெரிவித்துள்ளதாவது; விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE எனும் கருவி நிலவின் தென்துருவ மேற்பரப்பின் வெப்ப நிலையை ஆய்வு செய்துள்ளது. இதன் மூலம், நிலவின் வெப்பநிலையை குறித்து புரிந்துகொள்ள முடியும். அதேபோல், நிலவின் 10 செ.மீ ஆழம் வரை இருக்கும் சராசரியான வெப்பநிலையை தெரியப்படுத்தும். இந்த ஆய்வில் ஆய்வில் 10 தனிப்பட்ட வெப்பநிலை சென்ஸார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பல்வேறு ஆழங்களில் நிலவின் மேற்பரப்பு, மேற்பரப்புக்கு அருகில் வெப்பநிலை மாறுபாடுகளை இந்தப் படம் விளக்குகிறது, இது ஆய்வின் ஊடுருவலின் போது பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தின் சராசரி வெப்பநிலையை ஆய்வு செய்வது இதுவே முதல் முறை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.