ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 171 சட்டமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சுமார் 151 தொகுதிகளை கைப்பற்றி ஆந்திர மாநிலத்தின் முதல்வராக முதன் முறையாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார். ஆனால் இன்னும் ஆந்திர மாநில அமைச்சரவை உருவாகவில்லை. இந்நிலையில் இன்று முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் தலைநகர் அமராவதியில் நடைபெற்றது.
அதில் புதிய திட்டங்கள், அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவது என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஜெகன் ஆலோசனை செய்தார். கூட்டத்தின் இறுதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளிட்டார். அந்த அறிவிப்பு ஆந்திர அரசியலில் வியப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலத்தில் அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 5 துணை முதல்வர்களை நியமிப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவரும், நகரி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான நடிகை ரோஜாவிற்கு துணை முதல்வர் பதவியை ஜெகன் வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராகவும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராகவும் அரசியல் நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். அதே போல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஆந்திராவில் உள்ள அனைத்து கிராமத்திற்கும் கொண்டு சேர்த்து கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஜெகன்மோகன் ஆட்சி அமைக்க வைக்க காரணமாவர். இதனால் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக நடிகை ரோஜாவிற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.