தனது கிராமத்தின் நீர் தேவைக்காக 30 ஆண்டுகளாக தனியொருவராகக் கால்வாய் வெட்டிய முதியவருக்கு டிராக்டர் ஒன்றைப் பரிசளித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
பீகார் மாநிலம் கொத்திவாலா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லாயுங்கி புய்யான். மலைக்கிராமமான கொத்திவாலாவில் மக்களின் தேவைக்கு நீர் கிடைக்காத சூழல் நிலவிவந்துள்ளது. இதனால் அருகில் உள்ள வனப்பகுதிக்குச் சென்றே மக்கள் நீர் எடுத்துவரவேண்டிய நிலை இருந்துள்ளது. அக்கிராமத்தின் இந்த நிலையை மாற்ற நினைத்த லாயுங்கி செய்யான், காட்டின் மலைப் பகுதியில் இருக்கும் நீர் வீணாக ஆற்றில் கலப்பதைத் தடுத்து, அதனைத் தனது கிராமத்திற்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார். ஆனால், இதற்காக ஒரு கால்வாயை வெட்டலாம் என அவர் கூறிய யோசனையை யாரும் ஏற்கவில்லை.
ஆனால், தனது யோசனையில் நம்பிக்கைகொண்ட லாயுங்கி புய்யான் யார் உதவியும் இன்றி தனியாகக் கால்வாய் வெட்டும் பணியைத் தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக தனியொருவராகப் பணியாற்றி பாறைகளைக் குடைந்து கிராமத்திற்காகக் கால்வாயை ஏற்படுத்தியுள்ளார். இதன் விளைவாக மலைப்பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமத்திற்கு தற்போது தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது.
இந்த முதியவரின் செயல், ஊடகங்களில் வெளியாகி பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், ஊடகம் ஒன்றில் இதுகுறித்து லாயுங்கி புய்யான் பேசுகையில், "விவசாயமும் கால்நடைகளையுமே மட்டுமே நம்பியுள்ள எனக்கு ஒரு டிராக்டர் இருந்தால் சந்தோஷம்" எனத் தெரிவித்தார். இந்நிலையில் இவரது பேட்டியைப் பார்த்த மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா உடனடியாக லாயுங்கிக்கு டிராக்டரை பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.