கர்நாடகா மாநிலத்தில் பால் உற்பத்தி செய்யும் கூட்டுறவு அமைப்பானது நந்தினி என்ற பெயரில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் தனது சேவையை கர்நாடகவில் விரைவில் தொடங்குவதாக அறிவித்து இருந்தது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் அமுல் நிறுவனம் சேவையை தொடங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் ஹாசனில் உள்ள நந்தினி பால் பார்லருக்கு சென்று அதன் பொருட்களை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "அமுல் நிறுவனம் கர்நாடகாவில் தனது சேவையை தொடங்குவது கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் உரிமை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது. 70 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் உற்பத்தி செய்து அதனை நந்தினி கூட்டுறவு சங்கத்திற்கும் கொடுக்கின்றனர். குஜராத்தின் அமுலும் விவசாயிகளால் நடத்தப்படும் அமைப்பு தான். ஆனால் அமுல் நிறுவனத்தை உயர்த்தும் வகையில் நந்தினியை பின்னுக்கு தள்ளுவது சரியல்ல. பாஜக அரசு விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நமது பால் உற்பத்தியையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும்" என கூறினார்.