இந்தி மொழி, இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது. இதனையொட்டி ஆண்டுதோறும் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் செப்டம்பர் 14ஆம் தேதியான இன்று இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் சமூகவலைதளங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக ஹாஸ்டாக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. இதற்கிடையே இந்தி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியை திறன்மிக்க மொழியாக மாற்றியதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளனர். உங்களின் முயற்சியால்தான் இந்தி, உலக அரங்கில் ஒரு வலுவான அடையாளத்தை ஏற்படுத்திவருகிறது" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி தினத்தையொட்டி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தி திவாஸ் நாளான இன்று, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது தாய்மொழியுடன் இந்தியையும் அடிப்படை வேலைகளுக்குப் பயன்படுத்த உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் முன்னேற்றம் தாய்மொழி மற்றும் அலுவல் மொழியின் ஒருங்கிணைப்பில் அடங்கியுள்ளது" என தெரிவித்துள்ளார்.