புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நீரழிவு நோய்க்கான சிறப்பு வெளிப்புற சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு அதை இன்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பொறுத்தவரை அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் டெண்டர் போடப்பட்டு நிறைய தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓராண்டிற்கு முன்பாகவே முடிந்திருக்க வேண்டிய இந்த திட்டத்தை நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு முடிக்க இருக்கிறோம். அதற்கு முழு முயற்சி எங்களுடைய ஆட்சி. கடந்த ஆட்சியை போல சுணக்கமாக இருந்திருந்தால் இன்றைக்கு நமக்கு பல கோடி ரூபாய் கிடைத்திருக்காது. ஸ்மார்ட் சிட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சில துறையின் அதிகாரிகளை சந்தித்து ஸ்மார்ட் சிட்டியை பொறுத்தவரை எந்த விதத்திலும் காலதாமதம் ஏற்படக் கூடாது என்றும், எந்தவித ஊழலும் நடந்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினோம். இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏதும் குறை இருந்தால் நானே விசாராணைக்கு ஏற்பாடு செய்வேன். லஞ்சமும் ஊழலும் எங்கு நடந்தாலும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அது மக்களுக்கே நன்றாகத் தெரியும். இப்போது வரைக்கும் இந்த திட்டம் நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் குற்றம் சாட்டுவதை தவிர்த்து புதுவையின் மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவோம்” என்று தெரிவித்தார்.