பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களை வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்தத் தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்தப் பத்திரங்களைக் கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்தக் கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்ததையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் எனத் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், தேர்தல் பத்திரம் திட்டத்திற்கு மாற்றாக புதிய திட்டத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று (26-05-24) பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘நன்கொடையாளர்கள் எஸ்.பி.ஐ இல் இருந்து பத்திரங்களை வாங்குவதன் மூலம் தங்களது பெயரை வெளியிடாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் திட்டம் ஒரு முக்கியமான நேரத்தில் கைவிடப்பட்டது.
இது தேர்தல் மற்றும் அரசியலில் கறுப்புப் பணத்தின் செல்வாக்கை அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கணக்கை சமர்ப்பிக்கும் போது, ரொக்க நன்கொடை மூலம் எவ்வளவு பணம், காசோலை மூலம் எவ்வளவு என்பது தெரியவரும். தேர்தல் பத்திரம் திட்டத்தின் போது காசோலைகள் மூலம் நன்கொடை எண்ணிக்கை 96 சதவீதத்தை எட்டியிருந்தது. இப்போது நீங்கள் அறிவீர்கள். கருப்புப் பணத்தின் தாக்கம் அதிகரித்தால், அதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்” என்று கூறினார்.
இதனையடுத்து, தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்வதால், நடந்து வரும் தேர்தல்களில் கருப்புப் பணத்தின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று நினைக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், “அப்படித்தான் நினைக்கிறேன். பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் விவாதிக்க வேண்டும். அவர்களின் தீர்ப்பு வந்துள்ளதால் உச்ச நீதிமன்றத்தின் பார்வையும் மிக முக்கியமானது. அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரலையும் கலந்தாலோசிக்க வேண்டும். எனவே நாம் கூட்டாக ஆலோசித்து புதிய மாற்றத்தை முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.