நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நேற்று முன் தினம் (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் போதுமான வாக்குகள் கிடைத்தால், தான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இது உச்ச நீதிமன்றத்தின் தெளிவான அவமதிப்பு என்று நான் நம்புகிறேன். ஒருவர் வெற்றி பெற்றால், அவர்கள் குற்றவாளிகளாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் அவர்களை சிறைக்கு அனுப்பாது என்று அவர் கூற முயல்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிகள் தங்கள் தீர்ப்பு எப்படி பயன்படுத்தப்படுகிறது அல்லது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.
சட்டத்தை விளக்குவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு. இது ஒரு சாதாரண அல்லது வழக்கமான தீர்ப்பு அல்ல என்று நான் நம்புகிறேன். அவரை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரது கட்சி 22 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. மேலும், நாடு முழுவதும் மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் உத்தரவாதம் அளிக்கிறார். நீங்கள் 22 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறீர்கள், எப்படி ஆட்சி அமைப்பீர்கள்?.
மம்தா பானர்ஜி ஒரு புதுவகையான நடவடிக்கையை உருவாக்கியுள்ளார். முதலில் அட்டூழியங்களைச் செய்யுங்கள், ஒருமுறை மக்கள் இதைப் பற்றி பேசினால், அதை மறைத்துவிட்டு மீண்டும் அட்டூழியங்களை நடத்துங்கள். சந்தேஷ்காலி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஒரு பெண் முதலமைச்சரின் ஆட்சியின் கீழ், மதத்தின்படி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கின்றன. அவர் அமைதியாக இருக்கிறார். உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும். இன்னும் மேற்கு வங்க காவல்துறையால் எந்த விசாரணையும் இல்லை. பின்னர் வழக்கு சிபிஐக்கு செல்ல வேண்டும். இதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்” என்று கூறினார்.