சமீபத்தில் இந்தியா - சீனா எல்லையில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள 11 இடங்களை சொந்தம் கொண்டாடும் வகையில் 'தெற்கு திபெத்' எனக் குறிப்பிட்டு சீனா பெயர் மாற்றம் செய்திருந்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று இந்தியா- சீனா எல்லையில் உள்ள கிபித்து கிராமத்தில் வைப்ரன்ட் வில்லேஜஸ் என்ற திட்டத்தைத் தொடங்குவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு சீனா தரப்பில் இருந்து அமித்ஷாவின் இந்த பயணத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்தது. மேலும் அமித்ஷாவின் அருணாச்சல பிரதேசம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டி ஒன்றில், “ஜாங்னான் சீனாவின் ஒரு பகுதியாகும். இங்கு இந்திய அதிகாரிகள் வருகை தருவது என்பது சீனாவின் இறையாண்மையை மீறும் செயலாகும். இது எல்லையில் நிலவும் அமைதியான சூழலுக்கு உகந்தது அல்ல'' என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இருப்பினும் அமித்ஷா திட்டமிட்டபடி அங்கு சென்று திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித்ஷா அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது" என்று கூறினார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில், "சீனா தெரிவித்துள்ள கருத்துகளை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். இந்திய தலைவர்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு செல்வதை போலவே அருணாச்சல பிரதேசத்துக்கு வழக்கம்போல் செல்வார்கள். அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாத பகுதியாகவும் இருக்கும். இதுபோன்று சீனா எதிர்ப்பு தெரிவிப்பது அர்த்தமற்றதுடன், இது போன்ற கருத்துகள் உண்மைத் தன்மையை எந்த விதத்திலும் மாற்றிவிடாது" என்று கூறினார்.