ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சார் வங்கி விதிமுறைகளை மீறி, வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியுள்ளார் என முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்திற்கு விதிகளை மீறி ரூ. 3,250 கோடி கடன் வழங்கி, தனது கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்திற்கு உதவியதாக கடந்த 2018-ம் ஆண்டு, மே மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நிர்வாகம், முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 2018-ம் ஆண்டு மே மாதம் 30-ல் தனி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்தா கோச்சார், தனது பதவியை இராஜினாமா செய்தார். அப்போதே இவருக்கு பதிலாக சந்தீப் பாக்ஷி என்பவர் அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையில் கடந்த 24-ம் தேதி சந்தா கோச்சார், அவரின் கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவன அதிபர் வி.என்.தூத் ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து, தொடர் சோதனையிலும் சி.பி.ஐ ஈடுபட்டுவந்தது. வழக்கு பதிவு செய்து நான்கு நாட்கள் கழிந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்துவந்த சி.பி.ஐ அதிகாரி சுதான்ஷூ தார்மிஷ்ரா திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டு, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு சி.பி.ஐ கிளையில் நியமிக்கப்பட்டார். இது குறித்து அப்போது சி.பி.ஐ தரப்பில், சுதான்ஷூ தார்மிஷ்ரா இந்த வழக்கை மிகவும் தாமதாகவும், அதுமட்டுமின்றி சோதனை தொடர்பான விவரங்களை வெளியில் கசியவிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினாலும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தது. இத்தனை மாற்றங்களை சந்தித்த இந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கடன் மோசடி விவகாரத்தில் நேற்று ஸ்ரீகிருஷ்ணா குழு சந்தா கோச்சார் வங்கி விதிமுறைகளை மீறியுள்ளார் எனும் தகவலை தெரிவித்துள்ளது.
நேற்று மும்பையில், ஐ.சி.ஐ.சி.ஐ, வங்கி இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சார்பாக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழு, சந்தா கோச்சார், வங்கி விதிமுறைகளை மீறி வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளது. மேலும் சந்தா கோச்சாரின் இராஜினாமாவை பதவி நீக்கமாக மாற்றவும் இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.