மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. இத்தகைய நிறுவனங்களை தனியாருக்கு விற்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் தகவல் தொலைத் தொடர்பு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மற்றும் எம்.டி.என்.எல் (MTNL) ஆகிய நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியால் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்ததாகவும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அரசு கண்டுக்கொள்ளவில்லை. இதனால் தான் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஊழியர்களுக்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய மாத ஊதியம், இன்னும் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் இந்த இரு நிறுவனங்களில் மட்டும் சுமார் 1.98 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மொத்த மாத சம்பள செலவுகள் 750 முதல் 850 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது, எம்டிஎன்எல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத சம்பள செலவுகள் சுமார் ரூபாய் 160 கோடி ஆகும். இது தொடர்பாக பி.எஸ்.என்.எல் நிறுவன உயர் அதிகாரிகள் கூறும் போது ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.