ஜனநாயகத்தின் வேர்களை இருளின் படைகள் அழிக்கத்துடிக்கின்றன!- சோனியா காந்தி
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த சிறப்பு விவாத நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசினார். அப்போது அவர் ஜனநாயகத்தின் வேரை இருளின் படைகள் அழிக்கத்துடிக்கின்றன எனக் குறிப்பிட்ட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட நேரத்தில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பு குறித்து பேசினார்.
மேலும் அவர், குறுகிய மனமுடைய, இனவாத அரசியலுக்கு இந்தியாவை இரையாக்க யாரும் அனுமதிக்கக் கூடாது. நாட்டில் மதநல்லிணக்கமும், கருத்துச் சுதந்திரமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. நம் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பில்லை யென்றால், அந்த கொடிய சக்திகளை நாம் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும். ஜனநாயகத்தின் வேர்களை இருளின் படைகள் அழிக்கத் துடிக்கின்றன. வெறுப்புணர்வும், பிரிவினையும் கொண்ட கருமேகங்கள் நம் நாட்டின் மதச்சார்பின்மையை மூடி மறைக்கின்றன.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் எண்ணியது போல, நாம் ஒவ்வொருவரும் அன்பால் பிணைக்கப்படுவதற்காக போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்