உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கி, மார்ச் ஏழாம் தேதிவரை ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்த அகிலேஷ் யாதவ், தனது முடிவை மாற்றிக்கொண்டு, தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தகவல் வெளியானது.
மேலும் அவர், மெயின்புரியில் உள்ள கர்ஹால் தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்தநிலையில் அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் போட்டியிடப்போவதை, அகிலேஷின் உறவினரும், மாநிலங்களைவை எம்.பியுமான ராம் கோபால் யாதவ் உறுதி செய்துள்ளார். இதன்மூலம் அகிலேஷ் யாதவ், தனது முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவது உறுதியாகியுள்ளது. அகிலேஷ் யாதவ் மக்களை தேர்தல்களில் வென்றிருந்தாலும், மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதில்லை. உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது, அவர் சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகிலேஷ் யாதவ் போட்டியிட இருக்கும் கர்ஹால் தொகுதியில் 1993 ஆம் ஆண்டு முதல் (2002 தேர்தலை தவிர்த்து) சமாஜ்வாடி கட்சியே வெற்றி பெற்று வருகிறது. மேலும் கர்ஹால் சட்டமன்ற தொகுதி அடங்கியுள்ள மெயின்புரி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் ஐந்து முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.