Skip to main content

“காந்தியின் வார்த்தைக்குக் காங்கிரஸ் மதிப்பளிக்கவில்லை” - பிரதமர் தாக்கு 

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

PM Modi said that Congress did not respect Gandhi words

 

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அத்துடன் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். 

 

இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, “இந்திய நாட்டை சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி கிராமப்புற மக்களின் நம்பிக்கையைத் தகர்த்தது. கிராமப்புற சாலைகள், பள்ளிகள், மின்சாரம் இப்படி எதுவுமே மேம்படுத்தப்படவில்லை. காங்கிரஸ் கிராமங்களை ஓட்டு வங்கியாகக் கருதாததால், பணம் செலவழிக்கவும் தயக்கம் காட்டியது. இப்படித் தொடர்ந்து கிராமத்தைப் புறக்கணித்த அந்த கட்சியை மக்களும் புறக்கணித்தனர். மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கு முன்பு கூட பஞ்சாயத்து ராஜ் திட்டத்திற்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ கிராம மக்களுக்குத் துரோகம் செய்தது. இந்தியாவின் ஆன்மா, கிராமங்களில் இருப்பதாக மகாத்மா காந்தி கூறினார். ஆனால் அவரது வார்த்தைகளுக்குக் காங்கிரஸ் மதிப்பளிக்கவில்லை. ஆனால் பாஜக அப்படியில்லை, கிராமங்களின் வளர்ச்சியை மேம்படுத்தியது. பஞ்சாயத்துகளுக்கான மானியத்தை ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தியது. 

 

கிராமங்களில் 'ஜன்தன் யோஜனா' திட்டத்தின்கீழ், 40 கோடிக்கு மேற்பட்டோருக்கு வங்கிக்கணக்கு தொடங்க வைத்தது. முத்ரா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கானோருக்குக் கடன் அளித்தது. கிராமப்புறங்களில் 3 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை, பெண்கள் பெயரில் அளிக்கப்பட்டதால், பெண்கள் சொத்து உரிமையாளர்களாக உயர்ந்துள்ளனர். வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு, பஞ்சாயத்திற்கு இணையதள இணைப்பு எனப் பலவேறு நலத் திட்டங்களை பாஜக கொண்டு வந்துள்ளது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்