புதுச்சேரி கோரிமேட்டில் இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் (cyber crime police station) அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை திறந்து வைத்தனர். அதேபோல் மூலக்குளம் பகுதியில் 3 கோடி ரூபாய் செலவில் ரெட்டியார் பாளையம் காவல் நிலையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதிலும் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் கலந்துகொண்டு பணிகளைப் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரியில் ரெட்டியார் பாளையம் காவல் நிலையம் பல ஆண்டுகளாகக் கட்டப்படாமல் இருந்த நிலையில் தற்போது புதிய காவல் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்று கோடி ரூபாயில் கட்டப்படும் இந்தக் கட்டிடம் ஆறு மாதத்திற்குள் திறக்கப்படும். மேலும் கோரிமேடு பகுதியில் சைபர் கிரைம் பிரிவுக்காக புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நவீன குற்றங்களைத் தடுப்பதற்காக முழுமையான வசதிகளுடன் சைபர் கிரைம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 1600 சைபர் கிரைம் குற்றங்களுக்கான தகவல்கள் வந்துள்ளது. அதில் 500 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள குற்றங்களை விரைந்து முடிப்பதற்காகத் தற்போது புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பமான சைபர் கிரைம் குற்றங்கள் நடக்கும்போது அதைக் கண்டுபிடிப்பதற்காக நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு சைபர் கிரைம் குற்றங்கள் விரைந்து கண்டுபிடிக்கப்படும்" என்றார்.