18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இதனையொட்டி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்பி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திமுக எம்பி ஆ.ராசா எனப் பலரும் உரையாற்றினார்.
இத்தகைய சூழலில் தான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி இன்று (02.07.2024) பதில் அளித்துப் பேசினார். இதற்கிடையே மணிப்பூர் விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் பிரதமர் மோடி 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பதில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் நாளை (03.07.2024) வரை நடக்கவிருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த வேண்டுமென்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் நாளை (03.07.2024) விவாதிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி இருந்த நிலையில் மக்களவையைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.