அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 - 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அதாவது இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான கவுதம் அதானி மீது புகார் எழுந்தது. இதில் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் அதானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற தொழிலதிபர் அதானி லஞ்சம் தர சம்மதித்துள்ளார் என்ற பரபரப்பு கருத்தை நீதிபதி தெரிவித்துள்ளார். சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுக்க முன்வந்த புகாரில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த லஞ்சப் புகார் எதிரொலியால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் விலை சரிவைச் சந்தித்துள்ளன.
அந்த வகையில் அதானி எண்டர் பிரைசஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் பங்குகள் விலை 10 சதவீதம் சரிந்துள்ளன. அதானி துறைமுக (போர்ட்) பங்கு விலையும் 10 சதவீதத்துக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. அதே போன்று அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி, அதானி பவர் நிறுவனங்களின் பங்குகள் விலை தலா 10 சதவீதத்துக்கும் மேல் விலைகள் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அதானி எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளில் விலை 20 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளன.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவே இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்படுகின்றன. அமெரிக்க நீதித்துறை, ‘குற்றப்பத்திரிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை பிரதிவாதிகள் நிரபராதிகளாகக் கருதப்படுவார்கள்’ எனக் கூறியுள்ளது. எனவே சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் தேடப்படும்.
அதானி குழுமம் எப்பொழுதும், அதன் செயல்பாடுகளின் அனைத்து அதிகார வரம்புகளிலும் மிக உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தைப் பராமரிப்பதில் உறுதியாக உள்ளது. எங்கள் பங்குதாரர்கள், ஊழியர்களுக்கு நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு, அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குகிறோம் என்று உறுதியளிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.