
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரகதிபவன் இல்லத்தில் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவை, நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, நடிகர் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வரவேற்ற முதலமைச்சர், வீணையை நினைவுப் பரிசாக வழங்கினார். அதேபோல், முதலமைச்சருக்கு நடிகர் விஜய் பூங்கொத்து கொடுத்தார்.

சமீபத்தில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய நிலையில், தற்போது தெலங்கானா முதலமைச்சரை விஜய் சந்தித்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், தெலங்கானா முதலமைச்சருடனான நடிகர் விஜய்யின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தகவல் கூறுகின்றன.