கரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அதேவேளையில், கட்டுபாடுகளுடன் தடுப்பூசி செலுத்திகொள்வதன் மூலமே கரோனா பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடமுடியும் என்றும் மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு பேசுபொருளாகி இருக்கிறது. டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்து விட்டதாகவும், இதனால் சிகிச்சைப் பலனிற்றி நோயாளிகள் இறந்ததாகவும் வெளியாகும் செய்திகள் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
''ஆக்சிஜன் இல்லை என்று பொய் கூறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இந்நிலையில் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்த உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நடிகர் சித்தார்த் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், ''மனிதராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும்'' என தெரிவித்துள்ளார்.