மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் கடந்த 7ஆம் தேதி பிஎம்டபிள்யூ கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இந்த கார், அங்கு சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதனால், இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தியதில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா தான் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, மிஹிர் ஷா தலைமறைவானார்.
இதற்கிடையில், மிஹிர் ஷாவின் தந்தையும், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் துணைத் தலைவருமான ராஜேஷ் ஷாவையும், ராஜேஷ் ஷாவின் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிடாவத் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 14 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், மிஹிர் ஷாவை மும்பை போலீசார் நேற்று (09-07-24) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்த நிலையில், சிவசேனா கட்சியுடன் தொடர்புடையவரின் மகன் என்பதற்காக தண்டனையில் இருந்து மிஹிர் ஷாவை தப்ப வைக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள், மகாராஷ்டிரா அரசை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், சிவசேனா கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து மிஹிர் ஷாவின் தந்தையான ராஜேஷ் ஷா நீக்கும்படி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது சிறுவன், கடந்த மே 19ஆம் தேதி மது அருந்திவிட்டு தனது தந்தையின் சொகுசு வாகனத்தில் அதிவேகமாக வந்து முன்னே சென்ற பைக் மீது மோதியதில் பைக்கில் பயணித்த ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.