காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய 'இந்திய ஒற்றுமை பயணம்' 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நியாய யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைபயணத்தை நடத்தப் போவதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து துவங்கும் இந்த நியாய யாத்திரைக்கான துண்டு பிரசுரங்கள் மற்றும் வலைதளத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களான ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கே.சி.வேணுகோபால் இன்று (10-10-24) துவக்கி வைத்தனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளதாவது, ‘ராகுல் காந்தியின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாது’ என்று கூறியுள்ளது.
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், இது ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் எனவும் யாத்திரையை தடுக்க மணிப்பூர் அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 8 மாதங்களுக்கும் மேலாக இரு சமூகத்தினரிடையே வன்முறை நிலவி வந்ததையடுத்து, பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.