உக்ரைன்- ரஷ்யா போர் நிலவி வரும் சூழலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, தலைநகர் பெர்லினில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisment

அதைத் தொடர்ந்து, ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, சிறுமி ஒருவர் தான் வரைந்த பிரதமரின் உருவப்படத்தை அவரிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். அந்த புகைப்படத்தில் பிரதமர் கையெழுத்திட்டு, சிறுமியை உற்சாகப்படுத்தினார். மேலும், சிறுவன் ஒருவன் பிரதமரிடம் ஒருபாடலைப் பாட, அதனை சுடக்குப்போட்டு ரசித்த பிரதமர், 'Wow' என்று கூறி சிறுவனைப் பாராட்டினார்.

Advertisment

ஜெர்மனி சுற்றுப்பயணத்தின் போது, அந்நாட்டு அதிபர் ஓலப் ஸ்கோல்ஸைச் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாளை (03/05/2022) டென்மார்க் செல்லும் பிரதமர், இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த உச்சி மாநாட்டில் டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து, ஸ்வீடன் நாட்டு பிரதமர்களும் பங்கேற்கின்றனர்.

மே 5- ஆம் தேதி அன்று பிரான்ஸ் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.