ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகள், ஜாதி மற்றும் மத ரீதியில் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்பது பொதுவான விதியாகும். அப்படி இருக்கையில், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர், ‘இந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்’ என்ற பெயர் கொண்ட வாட்ஸ் அப் குழுவில் இருந்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படம் வெளியாகி, கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. அதில், கேரளா மாநில தொழில்துறை மற்றும் வணிகத்துறை இயக்குநான கோபாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் என்பவர் தான், இந்த குரூப்பை தொடங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. இதற்கிடையில், சில நாட்களிலே இந்த குரூப் கலைக்கப்பட்டது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையில், தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாகவும், அதன் பிறகு தான் பல வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டன என்றும் கோபாலகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கோபாலகிருஷ்ணனின் மொபைல் போன் ஹேக் செய்யப்படவில்லை என்று தெரிந்தது. இந்த நிலையில், மதம் சார்ந்த வாட்ஸ் அப் குழுவை தொடங்கியதற்காக கோபாலகிருஷ்ணனனை, அம்மாநில அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கோபாலகிருஷ்ணன் இடைநீக்கம் செய்யப்பட்ட அதே நேரத்தில், பிரசாந்த் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியையும் அம்மாநில அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தன் பேரில், பிரசாந்த ஐ.ஏ.எஸ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.