முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும், பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட இருந்த நிலையில், அவர் பல பெண்களுடன் இருப்பது போன்ற 3, 000ஆபாச வீடியோக்கள் வெளியாகி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்ற நிலையில், இந்த வழக்கைக் கர்நாடக மாநிலத்தின் சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) கையில் எடுத்தது. இதையடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் பெங்களூர் திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூரூ விமான நிலையத்திலேயே வைத்து போலீஸ் கைது செய்தது.
பிரஜ்வல் ரேவண்ணா மீது பதியப்பட்ட 4 வன்கொடுமை வழக்குகள் குறித்து எஸ்.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், முதல் வழக்கில் மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1632 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 113 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 45 வயது பெண் ஒருவர் விட்டுவிடும் படி கெஞ்சியும் கேட்காமல் வலுக்கட்டாயமாக பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தோட்டத்து வீட்டில் வேலை செய்து வந்த 45 வயதுள்ள வேலைக்கார பெண்ணிடம் பிரஜ்வல் ரேவண்ணா தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். அவரும் தண்ணீர் எடுத்து வர, அவரை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண் தன்னை விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும், விடாமல் வன்கொடுமை அதனை பிரஜ்வல் ரேவண்ணா வீடியீவாகவும் எடுத்திருக்கிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் அளித்ததோடு நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளதாகக் குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.