70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 8- ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 11 ஆம் தேதி வெளியான நிலையில், ஆம் ஆத்மீ கட்சி 62 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து வரும் 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார்.
ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், வெளிமாநில அரசியல் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்த விழாவில் பங்கேற்க தற்போது ஆம் ஆத்மி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் பிரதமர் மோடி பங்கேற்பது குறித்து இதுவரை மத்திய அரசு சார்பில் எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.