பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மல்விந்தர் சிங் சித்து. இவர் பஞ்சாப் காவல்துறையின் உதவி ஆய்வாளர் ஜெனரலாக பொறுப்பு வகித்து வந்தார். இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவரது மகன் ஹர்பிரீத் சிங், நீர்ப்பாசனத் துறையின் அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில், இவருக்கும் இவரது மருமகனுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து இரு தரப்பினரும் சண்டிகர் குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இருதரப்பினருக்கும் மீடியேசன் செஸ்ஸன் நடத்தப்பட்டது. அப்போது, மல்வந்தர் சிங் கழிவறை பயன்படுத்துவதற்காக அந்த அறையை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து அவரது மருமகன் ஹர்பிரீத் சிங்கும் அந்த அறையை விட்டு வெளியேறினார். சிறிது நேரம் கழித்து, ஐந்து துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது, மல்வந்தர் சிங் அவரது மருமகனைத் தனது துப்பாக்கியால் சுட்டார். குற்றவாளியான மல்வந்தர் சிங்கை அங்கிருந்த வழக்கறிஞர்கள், ஒரு அறையில் அடைத்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். படுகாயமடைந்த ஹர்பிரீத் சிங்கை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகப் பதிலளித்தனர். நீதிமன்றத்திற்குள்ளே மருமகனை சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.