கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 12 பேர் பணி முடிந்த பின்னர் ஜீப்பில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர். அப்போது கன்னூத்மலை என்ற மலைப்பகுதியில் ஜீப் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காரில் பயணம் செய்த 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஓட்டுநர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கி இறந்த 9 பேரும் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் ஆவர். மேலும் விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில், “வயநாட்டில் பல தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சோகமான ஜீப் விபத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாவட்ட அதிகாரிகளிடம் பேசி, விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். என் எண்ணங்கள் துயரப்படும் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.